search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு தொடக்கம்"

    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன.

    இந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
     
    மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில்  மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய மந்திரிகள் 6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

    உ.பி.யின் முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.



    இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இதேபோல், புதுச்சேரியில் வெங்கட்டா நகரில் உள்ள வாக்குச்சாவடி 10-ல் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குகள் அழிக்கப்படவில்லை என்பதால் இங்கு மறு வாக்குப்பதிவு நடக்கிறது.

    7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×